சான்பிரான்சிஸ்கோ:
தொடுதிரை வசதி மின்சாதனங்களின் பயன்பாட்டை எளிமையாக்கியுள்ளது. இன்று வெளியிடப்படும் பல்வேறு தொழில்நுட்ப சாதனங்களிலும் தொடுதிரை வசதி அத்தியாவசியமான ஒன்றாகியுள்ளது.
அந்த வகையில் தொடுதிரை வசதி இல்லாத லேப்டாப்களின் திரைகளுக்கு தொடுதிரை வசதி வழங்க புதிய சாதனம் கண்டறியப்பட்டுள்ளது. ஏர்பார் (AirBar) என பெயரிடப்பட்டுள்ள இந்த சாதனம் சிறிய பட்டை போன்று காட்சியளிக்கிறது. இதனை லேப்டாப் திரையில் பொருத்தினால் லேப்டாப் திரையில் தொடுதிரை வசதி கிடைத்து விடுகிறது.
காந்த சக்தி கொண்ட ஏர்பார் மிகவும் எளிதாக உங்களின் திரையின் கீழ் ஒட்டிக் கொள்கிறது. பின் இதனுடன் இருக்கும் யுஎஸ்பியினை லேப்டாப்பில் பொருத்த வேண்டும். இவ்வாறு செய்ததும் ஏர்பாரில் இருந்து வெளிச்சம் திரையில் பாய்கிறது. இந்த வெளிச்சம் திரையில் ஜெஸ்டர்களை வழங்குகிறது. இதனால் திரையை கிள்ளி உள்பக்கம் தள்ளினால் சூம் இன் மற்றும் வெளியே இழுக்கும் போது சூம் அவுட் செய்ய முடியும். இத்துடன் இன்றைய ஸ்மார்ட்போன்களில் கிடைப்பதை போன்ற தொடுதிரை அனுபவம் இந்த சாதனம் லேப்டாப் திரையில் வழங்குகிறது.
லேப்டாப்களுடன் இணைக்கப்பட்டாலும் விசித்திரமாக காட்சியளிக்காமல் இருக்கும் ஏர்பார், தற்சமயம் வரை 13.0 இன்ச் முதல் 15.0 இன்ச் திரை கொண்டுள்ள லேப்டாப்களுக்கு கிடைக்கிறது. ஏர்பார் சாதனத்தை நியோநோடு தளத்தில் இருந்து முன்பதிவு செய்ய முடியும். இதன் விலை 69 டாலர் முதல் துவங்குகிறது. ஏர்பார் சாதனம் மேக்புக் ஏர் லேப்டாப்களுக்கும் கிடைக்கிறது. இவற்றின் விலை 100 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஏர்பார் சாதனத்தை தயாரித்து வரும் நியோநோடு நிறுவனம் இச்சாதனம், தற்சமயம் இருப்பதை விட அதிக லேப்டாப் மற்றும் கணினிகளுடன் இணைந்து வேலை செய்வதற்கேற்ப மேம்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளது.
நன்றி: மாலை மலர்.
Social Plugin
Social Plugin